Thursday, March 5, 2026

ஏகமே அத்விதீயம்

தானும் நீயும்
வேறெனப் புலப்படா
சிந்தை தனதென்பதால்
பிரித்தறிந்து பேதம்
சொல்லிட உனக்கென்ற
அக்கறை  எனதில்லை......

அக்கரையில் நாமில்லை
இக்கரை நாளும்
நமதானதால் அக்கறையும்
அன்பும் காட்டிடும்
அவசியங்கள் எல்லாம்
உலகிற்கோர் வேஷம்.....

எனதென்ற இயல்பை
கடந்தே பின்னே நீ என
பேதம் கடந்து நான்
நாமாகும் யோகம் 
நாளெல்லாம்
நமக்குச் சொந்தம்.....
பேதம் உருவாக்கும்
படைப்பில் ஒன்று நானாக
வாசியும் நீ தான்
வாழ்வும் நீ தான்
ஒளியற்ற இருளில்
ஒடுங்கிடும் உயிரின்
தன்மை எல்லாம்...

இரண்டல்ல வேறல்ல
ஒன்றேயான பிரம்மமே
(ஏகமே வாத்விதீயம்” )
தன்னை தனக்குள்
ஒன்றி ஒன்றாய்க்
கலந்த உயிர்க் காதலின்
ஒருமித்த உன்னதம்....

#மாதங்கியின்_மைந்தன் #மாதங்கியான்

Wednesday, March 4, 2026

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுசூயா


உயர்வில் உயர்வான❤️❤️

உள்ளமதில் இனிதான👍

உயர் நிலை பாவையென....

வாக்கினில் மழலை என....

அரியதோர் வரம் என

அகம் நிறைவாய்

அன்புக்குருவின் ஆசியால்

பெற்ற வரமது சிறந்திட..

பல் நிலை உயர்வுகளும்

பாரினில் காண வந்தாள்

பகட்டில்லா பண்பு உரித்த

என்றும் வாடா அன்பு மலர்

என் அன்னை அனுசூயா

வாழ்க வாழ்கவே 🙏🙏🙏

#மாதங்கியின்_மைந்தன்

Saturday, February 28, 2026

உள் தமிழின் உயிர்ப்பு

ஆயிராமாயிரம் கணங்கள்
நேருக்கு நேர் என்றாகினும்
வரு மேகங்கள் என உந்தன்
இடைவிடாத பொய்க் கோபங்கள்....


பொய்களை மாய்க்கப் பிறக்கும்
உன் அருகிருப்போ புதுக்கவியென
இன் தமிழென வெளிவரும்
நேசத்தின் விதைகளே!!!..

வாக்கியங்கள் பல மாற்றி
பின்னே அதன் வரிசையும் மாற்றி
சற்றேனும் தளர்வுகள் என
தடம் மாற்றும் நிகழ் கால பந்தங்கள்...

விநயம் விகல்பம் என்றே வினோத
விகாரங்கள் என இருவரின் இடையே
வரும் மாயங்கள் தவிர்க்கச் செய்தாய்
உள் தமிழ்  உன்னால் மெல்ல எழும்...

காலம் கணிதனாய் சொல்லும்
புதிய விடையெல்லாம் புதுமையென
நாளும் வியக்கிறேன் இதனின்
பழமை மறந்த நிலையாய்☺️

எனக்குள்ளே நான்.....

#மாதங்கியின்_மைந்தன் #மாதங்கியான்

Thursday, February 19, 2026

மீண்டும் ஒரு மேக தூதம்

மீண்டும் ஒரு மேகதூதம் 
உனக்காக நான் பாட வேண்டும்...

மேகங்களை அனுப்பி தூது சொல்லும் சாத்தியம் மீண்டும் கை கூட வேண்டும்


இடையில் தடைகள் இல்லாமல் 
மன அஞ்சல் உன்னிடம் சேர வேண்டும்

காலம் கருணை கொண்டதால் 
 கவிதை உன் முகவரி அறிந்தேன் 🙏

அத்திங்களில் பிழையின்றி 
 என்னை உன்னிடம் அறிவித்தேன் 🌿🌿

தசம் இரண்டு ஆண்டுகள் தாண்டி 
தடாதகை உணர்த்திய அதிசயம் 

விதி வழியே இயல்பாய் செல்ல 
என்னை இன்னும் பணிக்குமோ 🪷🪷🪷

 துயர் துடைக்க உடன் நின்று உதவிடும்
தோழமையாய் இருக்க வரம் கேட்டேன் 

திருவருளால் காட்டியவள் யாரோ
உன் புரிதலுக்கு பெரிதும் உவப்பாள்

காத்திருக்கிறேன் அதிசயங்களை காண

#kavithaitamil #kavithai #tamilkavithai #மாதங்கியின்_மைந்தன் #மாதங்கியான்

Wednesday, February 18, 2026

அன்பியலின் பெருந்துணை

சிறு துயரங்கள் ஆகிப்போன என்                 சுமையை சுமக்கும் உன் பணிதான் அன்பியலே எத்துணை பெரிது.....

மலர்ச்செடிகள் சூழ் வனத்தின் நடுவே
மகரந்த நறுமணம் போல
உன் மனம் நினைத்து நெகிழ்வேன்.....
வலியில்லாத வாழ்க்கை தரத்துணிந்த
என் சித்தம்.. சித்தமதின் எண்ணங்களை
பெருமிதமாய் முடித்திருக்க காலம் உதவட்டும்.....

பெரிதான பொருள் சேர்ப்பில்
 வெறும் புகழில் மனமில்லை. 
நிகழ்கால ஊறுகள் பல தன்மைக்கு வருங்காலத்தில் இடமில்லை......

இடையிடையே சிறு இடைவெளிகள் ஒன்றே உன்புகழ் தமை 
எமக்கு உணர்த்தும். என்னுள்ளே 
மெல்ல மெல்லத் தமிழ் மலர்த்தும்..

இனியொரு தருணத்திலும்
 உன் இயல்பினை முத்தமிழாய் விளிப்பேன்.. 
முகுந்தன் கண்ட பெருந்துணை போல...

இல்லம் இனிக்க தன்னை பணிக்கும்
கனிவான உள்ளம் கொண்டவளே....

 வாக்கில் கலைமகள் நின்றாடும் 
கவி நிலவே...
வாழ்க நாளும் வளர்கவே....

#மாதங்கியான் #மாதங்கியின்_மைந்தன்

Tuesday, February 17, 2026

இதயத்தின் சாசனம்

உலகெங்கும் தேடி அலைந்தேன் பின்பு உன்னிடம் அது ஒளிந்துள்ளதை நான் உணர்ந்தேன். 


பார்வை குற்றம் என்று எண்ணாதே பாராத குற்றம் என்று கூட சொல் 🪷


உன் நெஞ்சகமே என் மஞ்சமான நிமிடங்கள்..
மௌனத்தின் பரிவர்த்தனைகள் 
புன்னகை ததும்பும் பார்வைகள்....



பாவக சுபத்துவத்தை ஆயுளுக்கும் வளர்த்தெடுக்கும் 
அவள் இயல்பு கவியின்
உவப்பாய்...


சந்தை இசைதனில் சிந்திக்க மறந்திட்ட 
மேன்மை வித்தகம் 
அட்ட கருமத்தை தொலைத்த அற்புதத்தை நிகழ்த்திடுமோ🪷


நித்திய காதலனாய் நிரந்தர விடை கொடுக்கும் ஒரு நாளில் உன் முன்னே நான் சென்று...


நீ இல்லா தனிமையை கொன்று தீர்ப்பேன் 
எனதாயுள் என்ற மேன்மையை இணைத்தும் நீ எனக்குமாய் வாழ வேண்டும்...


என் இனிய காதலே
 என் பின்னும் நீ வாழ்க பல்லாண்டு
 🪷🪷🙏🙏

#மாதங்கியான்

Sunday, February 15, 2026

இதயத்தின்‌ உதயம்

"கவலையில் கிடப்பவனைக் கலைத்து, கவிஞன் ஆக்கினாய்!

ஆயிரம் குழப்பங்கள் என்னிடமிருந்து தொலைந்து போக,


 இயல்பில் மனம் காணாத அமைதி உன்னால் அதிசயமாய் என்னுள் பூக்கும் 'அமிர்த காலம்' இது.



நீ தொட்டு வரைந்த அழகிய சிறு காவியம், ஆயுளுக்கும் இனிய நினைவாய் எந்நாளும் தொடரட்டும்.

மேன்மையான இயல்பில் என்னை நிறுத்தி வைக்க, 



காலம் முழுமைக்கும் கரம் பிடித்து அழைத்துச் செல்லும் என் இனிய கவிநிலவே!

ஆழக்கடலில் இருந்து கிளம்பி எழும் அழகிய உதயத்தைப் போல், 


என் இதயத்தில் நீ வெளிப்பட்டுத் தோன்றிட... 



இனிய கவிதைகளை நானும் என்னுள்ளிருந்து படைத்திடுவேன்!"


#மாதங்கியான் #மாதங்கியின்_மைந்தன்